Sunday, September 29, 2013

பெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5)

பெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5)
இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!

ரஜினி நடித்த 'வேலைக்காரன்' படத்தில் கவிஞர் மு.மேத்தா
எழுதி மலேஷியா வாசுதேவன் பாடிய இந்தப் பாடலைக்
கேட்டிருப்பீர்கள்.

"பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியக் கட்டிப்புட்டா
பெத்தவ மனசு பித்தாச்சு - இந்த
பிள்ளையின் மனசு கல்லாச்சு"

இந்த மகன் பாடும்போது தனது அம்மா தன்னை தத்து
கொடுத்துப்புட்டாள் என்றும் தன்னை வித்துப்புட்டாள்
என்றும் அடுத்தடுத்து பாடுகின்றான். இதில் தத்து
கொடுத்தாளா அல்லது வித்தாளா என்று குழப்பம்தான் வருகின்றது.

அடுத்து, பிள்ளையை தாய் பெறுகின்றாள். அந்த ஒரு
தியாகத்திற்காகவே, அந்த மகன் அவனது தாய்க்கு
பெரும் கடமைப் பட்டிருக்கின்றான். அதாவது தாய்க்கு
அவன் கடன் பட்டிருக்கின்றான். அதனால், அந்த
தியாகத்தை மனதில் நிலைநிறுத்தி, அதற்கான
பரிகாரமாய் அந்தத் தாய்க்கு, மகன் நன்றிக்கடன்
பட்டிருக்கின்றான். அதாவது கடன் பட்டிருக்கின்றான்
என்றும் வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு அந்த மகன்,
தாய்க்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றால்,
கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அத்தாய்
மகனை விற்று வட்டியை எடுத்துக் கொள்ளலாம். இது
நியதி.

ஆக, மகன் தான் தாய்க்கு கடன் பட்டிருக்கின்றான்
என்பதும் தாய்க்குத்தான் அந்த வட்டி செலுத்தப்படவேண்டும்
என்பதும் நமக்குத் தெரியவருகின்றது. தாய், வேறு யாருக்கும்
கடன் படவில்லை என்பதும் அவள் வட்டியை யாருக்கும்
செலுத்தத் தேவையில்லை என்பதும் நமக்குப் புரியவருகின்றது.
பாடலில் வரும் 'வட்டியக் கட்டிப்புட்டா' என்ற வார்த்தை
மாறுபட்ட அர்த்தத்தைத் தருகின்றது. வேறு ஒருவருக்கு
வட்டியை செலுத்திவிட்டாள் என்ற பொருள்பட இங்கு
பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பாட்டை பின்வருமாறு மாத்துங்க கவிஞரையா!

"பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டிஎடுத்துக்கிட்டா"

-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*

Sunday, September 22, 2013

பாட்டு ஒற்றுமை - 4

பாட்டு ஒற்றுமை - 4

காதலன் கனவில் காதலியும் காதலி கனவில்
காதலனும் வருவது இயல்பு. (சிலருக்கு அவர்களின்
கனவுக்கன்னிக் கதாநாயகி வருவாள்.)

சூர்யா கதாநாயகனாக நடித்த 'வாரணம் ஆயிரம்'
என்கிற படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்:

"இவள் என்ன என்ன தேடிவந்த அஞ்சல"

பின்வரும் இந்த வரியைக் கவனித்திருக்கிறீர்களா?
"படுத்தா தூக்கமும் இல்ல கனவுல தொல்ல"

எஸ்.பீ.பாலசுப்ரமணியன் மற்றும் எஸ்.ஜானகி பாடும்
"சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே"
என்கிற பாடல். இந்தப் பாடலில் காதலன் பாடும்
இந்த வரியைப் பாருங்கள்:

"சொப்பனத்தில் என்றும் உன் உருவம்"

சந்திரபாபு அவர்கள் பாடிய காலத்தால் அழியாத
தத்துவப் பாடல் இது:

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை"

இப்பாடலில் ஒரு சரணம்:
"கனவு காணும் மனிதனுக்கு
காண்பதெல்லாம் கனவு அவன்
காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
இவன் கனவில் அவள் வருவாள்
இவனைப் பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்
யாரைப் பார்த்து அழைப்பாள்"

இதில் "இவன் கனவில் அவள் வருவாள்"
என்கிற வரியை ரசித்தீர்களா?

பாரதிராஜா இயக்கிய ஏ.வி.எம்.தயாரித்த புதுமைப்பெண்
படத்தில் பீ.ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா பாடியது
இந்தப் பாடல்:

"இது ஒரு காதல் மயக்கம்"

இதில் காதலனும் காதலியும் பாடும் இந்த சரணத்தையும்
கவனியுங்கள்:

காதலன்: "நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை"
காதலி :  "நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை"
காதலன்: "மெய்யா பொய்யா?"
காதலி :  "மெய்தான் ஐயா!"

ஆக, காதலர்கள் சிலருக்கு கனவில் காதலனோ,
காதலியோ வருகிறார்கள். சிலருக்கு கனவுகள்
வருகின்றன.(காதலன், காதலி வருவார்களா எனத்
தெரியவில்லை.) சிலருக்கு கனவே வருவதில்லை.
எனவே, அனைத்துப் பாடல்களிலும் காதலர்களும்
கனவும் இணைந்து வருகின்றன(ர்).

ஒவ்வொரு கவிஞரும் தத்தமது கற்பனையைக் கொண்டு
ராகத்திற்கு ஏற்றபடி வேறு வேறு வார்த்தைகளில்
தந்துள்ளது ரசிக்கும்படி இருக்கின்றதல்லவா?

கவிஞர்களின் பெயர்களையும் தெரிந்தால்
கூறுங்களேன்.

-கலையன்பன்.

 *தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*

Saturday, September 14, 2013

ஓரக்கண்ணால... (பாட்டை மாத்துங்க கவிஞரையா - 4)இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!

"ஓரக் கண்ணாலே என்ன ஓரங்கட்டுறா" என்ற கானாவைப்
பாடிய 'கானா பாலா' ஒரு வழக்கறிஞரும்கூட.
கலைஞர் டீ.வி.யில் ஒளிபரப்பான 'கானா குயில் பாட்டு'
என்ற தொடர் போட்டியில் தேவா அவர்களிடமிருந்து
பரிசு வென்றவர். இவர் பாடல்கள் இயற்றிப் பாடுவதில் வல்லவர்.
சமீபத்தில் வெளியான 'உதயம் என்.ஹெச்.4' என்ற படத்தில்
மேலே குறிப்பிட்டிருக்கும் பாடலைப் பாடியிருந்தார் பாலா.
இப்பாடலின் இரண்டாவது சரணத்தின் கடைசி வரியில்,
"மச்சான் சேர்த்து வப்பான் - நீ
பீரக் குடி நண்பா"
என்று பாடியிருப்பார் பாலா.

சிகரெட் போன்ற போதைப் பொருட்களின் விளம்பரங்களை
வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பக் கூடாது;
இதழ்களில் பிரசுரம் செய்தல் கூடாது என்று தடை விதித்துள்ளது
மத்திய ஒலிபரப்புத் துறை. இதையும் மீறி போதை பானங்களின்
பெயரிலேயே சோடா தண்ணீரையும் தயாரிக்கும் நிறுவனங்கள்
சோடா தண்ணீர் விளம்பரங்களை லட்சக் கணக்கில் செலவு செய்து
ஒளிபரப்புகின்றன. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.

முன்பெல்லாம் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில்
சில அருவெறுக்கத்தக்க, கொச்சையான வார்த்தைகள்
இடம்பெற்றால், தணிக்கைத் துறை அந்த வார்த்தை
அல்லது வார்த்தைகளை கட் செய்துவிடும். வானொலி,
தொலைக்காட்சியில் அப்பாடல் ஒலி(ளி)பரப்பாகும்போதூ
வார்த்தையில்லாமல் மௌனமாக அந்த சில நொடிகள்
கடந்துபோகும். இக்காலத்திலோ, எத்தடையுமில்லை
என்றாகிவிட்டது. மானாடும், மயிலாடும் நிகழ்ச்சிகளில்
ஆடிப்பாடுவதை சிறார்கள் ரசித்துக் கேட்பதுவும்...
ஜூனியரா, சூப்பரா, சிங்கரா நிகழ்ச்சிகளில் சிறார்கள்
பாடுவதும்... அவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவதும்
கொடுமை!

"ஓரக்கண்ணால..." பாடலில் இடம்பெறும்
அந்தக் கடைசி வரியின் வார்த்தையான
'பீர' என்பதை தணிக்கைத் துறை தடை செய்திருக்க
வேண்டும். அல்லது படத்தில் போனால் போகிறது;
வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பும்போதாவது
அந்த சப்தத்தை (வார்த்தையை) வெட்டியிருக்கலாம்.


முன்பு 'பாவ மன்னிப்பு' படத்தில் "வந்த நாள் முதல்
இந்த நாள் வரை" என்ற பாடலின் பல்லவிலேயே
"மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்"
என்று படத்திலும் "மனிதன் மாறிவிட்டான் மரத்தில்
ஏறிவிட்டான்" என்று இசைத்தட்டுகளிலும் பாடல் வரி
மாறிவரும். அதைப் போலவே இந்தப் பாடலிலும்
செய்திருக்கலாம்.


அதனால் இந்தப் பாடலின் வரியில் வார்த்தையை இப்படி
ஏதாவது ஒரு வகையில் மாற்றுங்கள் கவிஞரையா!


ஒன்று:
"மச்சான் சேர்த்து வப்பான் - நீ
பாலக் குடி நண்பா"


இரண்டு:
"மச்சான் சேர்த்து வப்பான் - நீ
மோரக் குடி நண்பா"


மூன்று:
"மச்சான் சேர்த்து வப்பான் - தே
நீரக் குடி நண்பா" (தேநீர்)


நான்கு:
"மச்சான் சேர்த்து வப்பான் - இள
நீரக் குடி நண்பா" (இளநீர் கலபடமில்லாத
சுவை மிகுந்த சத்து பானம்.)
மேடைப்பாடக அன்பர்களும் இப்படி மாற்றிப் பாடக் கேட்டுக் கொள்கிறேன்.

-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*
                 
Related Posts Plugin for WordPress, Blogger...